மிச்சிகனில் உள்ள ஹைலேண்ட் பார்க் தெருக்களில் விளக்குகள் அணைந்தபோது, ஒளிக்கு மற்றொரு மூலமான சூரியன், அங்கு இரவில் ஒளியேற்றியது. மின் பயன்பாட்டு நிறுவனத்திற்குப் பணம் செலுத்த நிதியின்றி அந்நகரம் தவித்தது. மின்வாரியத்தினர் தெருவிளக்குகளை அணைத்து, 1,400 மின்கம்பங்களிலிருந்த மின்விளக்குகளை அகற்றினர். இதனால் நகரவாசிகள் பாதுகாப்பின்றி இருளில் மூழ்கினர். "இங்கே சில குழந்தைகள் பள்ளியிலிருந்து வருகிறார்கள், இங்கே விளக்குகள் இல்லை. அவர்கள் தெருவில் குத்துமதிப்பாகத்தான் நடக்க வேண்டும்" என்று ஒரு நகரவாசி செய்தி குழுவினரிடம் கூறினார்.
நகரத்தில் சூரிய சக்தியில் இயங்கும் தெருவிளக்குகளை நிறுவ ஒரு இலாப நோக்கற்ற குழு அமைக்கப்பட்டபோது, நிலைமை மாறியது. மனிதவள அமைப்பு ஒருங்கிணைந்து பணியாற்றி, எரிசக்தி கட்டணங்களில் நகரத்தின் பணத்தை மிச்சம் பிடித்தும், அதே நேரத்தில் நகரவாசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒளிக்கான ஆதாரத்தையும் பெற்றுத் தந்தது.
கிறிஸ்துவுக்குள்ளான நம் வாழ்வில், நமது நம்பகமான ஒளி ஆதாரம் தேவகுமாரனாகிய இயேசுவே. அப்போஸ்தலன் யோவான் எழுதியது போல், “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1யோவான் 1:5). யோவான், "அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்" (வ.7) என்று குறிப்பிட்டார்.
இயேசுவே தன்னை, "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” (யோவான் 8:12) என்று அறிவித்தார். தேவனின் பரிசுத்த ஆவியானவர் நம் ஒவ்வொரு அடியையும் வழிநடத்துகையில், நாம் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டோம். அவரது வெளிச்சம் எப்போதும் பிரகாசமாக ஒளிர்கிறது.
என் தோழியும் அவளது கணவரும் கருத்தரிக்கச் சிரமப்பட்டபோது, மருத்துவச் சிகிச்சை செய்யுமாறு மருத்துவர்கள் அவளுக்குப் பரிந்துரைத்தனர். ஆனால் என் தோழி தயங்கினாள். "நம்முடைய பிரச்சனையைத் தீர்க்க ஜெபம் போதுமல்லவா? எனக்கு உண்மையிலே மருத்துவச் சிகிச்சை அவசியமா?" எனக் கேட்டாள். தேவன் செயல்படுவதைப் பார்க்க, மனித பங்களிப்பை உணர முடியாமல் என் தோழி போராடினாள்.
இயேசு, திரளான ஜனங்களுக்கு உணவளித்த சம்பவம் இதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும் (மாற்கு 6:35-44). அந்த கதை எப்படி நிறைவடைந்தது என்பதை நாம் அறிந்திருக்கலாம்; ஆயிரக்கணக்கான மக்கள் சில அப்பம் மற்றும் மீன்களால் அற்புதமாகப் போஷிக்கப்படுகிறார்கள் (வ. 42). ஆனால் கூட்டத்திற்கு உணவளிப்பது யார் என்பதைக் கவனியுங்கள்? சீஷர்கள் (வ. 37). மேலும், யார் உணவு வழங்குகிறார்கள்? சீஷர்கள் (வ. 38). உணவை விநியோகித்து, பிறகு சுத்தம் செய்வது யார்? சீஷர்கள் (வ. 39-43). "நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள்" என்று இயேசு கூறினார் (வ. 37). இயேசு அற்புதம் செய்தார், ஆனால் சீஷர்கள் செயல்பட்டபோதுதான் அது நிகழ்ந்தது.
நல்ல பயிர் என்பது தேவனின் ஈவு (சங்கீதம் 65:9-10), ஆனால் ஒரு விவசாயி நிலத்தில் உழைத்தாக வேண்டும். இயேசு, பேதுருவிடம் "மீன் அகப்படும்" என வாக்களித்தார், ஆனால் மீனவரும் வலைகளை வீச வேண்டியிருந்தது (லூக்கா 5:4-6). தேவனால் நம்மையன்றி பூமியைப் பராமரிக்கவும், அற்புதங்களைச் செய்யவும் முடியும். ஆனால், பெரும்பாலும்மனிதனோடு இனைந்து செயல்படவே தேவன் விரும்புகிறார்.
என் தோழியும் சிகிச்சை பெற்று, பின்னர் வெற்றிகரமாகக் கருத்தரித்தார். இது அற்புதம் நடப்பதற்கான விதிமுறை இல்லை என்றாலும், என் தோழிக்கும் எனக்கும் இது ஒரு பாடமாக இருந்தது. தேவன் நம் கரங்களில் வழங்கியுள்ள முறைகளைக்கொண்டே, தமது அதிசயமான கிரியைகளை அடிக்கடி செய்கிறார்.
புற்றுநோயுடனான தனது வாழ்வைப் பற்றி இணையத்தில் வெளியிடும் சக எழுத்தாளர் ஒருவரைப் பின்தொடர்ந்து, அவருக்காக ஜெபிக்கிறேன். அவள் தனது சரீர வேதனை மற்றும் சவால்கள் குறித்தும், வேத வசனங்களுடன் ஜெப விண்ணப்பங்களையும், தேவனுக்குத் துதிகளையும், இணையத்தில் மாறிமாறி பதிவிடுவாள். சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும்போதோ அல்லது முடி உதிர்வதால் முக்காடு அணிந்து வீட்டில் இருக்கும்போதோ, அவளது தைரியமான புன்னகையைப் பார்ப்பது அழகாக இருக்கிறது. ஒவ்வொரு சவாலிலும், சோதனைகளின் மத்தியில் தேவனை நம்பும்படி பிறரை ஊக்குவிக்க அவள் ஒருபோதும் தவறுவதில்லை.
நாம் பாடுகளினூடே நடக்கையில், நன்றியுடன் இருப்பதற்கும் தேவனைத் துதிப்பதற்கும் காரணம் ஏதுமில்லாதது போலிருக்கலாம். இருப்பினும், சங்கீதம் 100, நம் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், மகிழ்வதற்கும் தேவனைத் துதிப்பதற்கும் காரணங்களைத் தருகிறது. சங்கீதக்காரன் கூறுகிறார்: “கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும் அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்” (வ.3). அவர் மேலும் கூறுகிறார், “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது” (வ.5).
நம்முடைய சோதனை எதுவாக இருந்தாலும், நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குத் தேவன் சமீபமாய் இருக்கிறார் (34:18) என்பதை அறிந்து நாம் ஆறுதலடையலாம் . ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் தேவனுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக “அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரி(ப்போம்)யுங்கள்” (100:4) . நம் தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால், குறிப்பாக நாம் கடினமான காலங்களில் இருக்கும்போது கூட நாம், "கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பா(டலாம்)டுங்கள்" (வ.1).